ஜம்மு பேருந்து நிலைய குண்டு வெடிப்பில் 18 பேர் காயம்

ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை பயங்கரவாத முகாம்களில் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டு எல்லை பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. அவ்வப்போது எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மறுபடியும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதற்கு இந்தியா பதில் தாக்குதலும் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 18 பேர் காயம் அடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தகவல் அறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குண்டுவெடித்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர், கையெறி குண்டுகளை வீசி பேருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜம்முவில் நடந்த அசம்பாவிதம் குறித்த முதற்கட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
ஜம்மு பேருந்து நிலைய குண்டு வெடிப்பில் 18 பேர் காயம் ஜம்மு பேருந்து நிலைய குண்டு வெடிப்பில் 18 பேர் காயம் Reviewed by Vanni Express News on 3/07/2019 02:55:00 PM Rating: 5