கோட்டாவுக்கு எதிரான வழக்கு மார்ச் 15ம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. 

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க எதிர்பார்த்துள்ளதாக கூறினார். 

அதன்படி வழக்கை மார்ச் 15ம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கோட்டாவுக்கு எதிரான வழக்கு மார்ச் 15ம் திகதி வரை ஒத்திவைப்பு கோட்டாவுக்கு எதிரான வழக்கு மார்ச் 15ம் திகதி வரை ஒத்திவைப்பு Reviewed by Vanni Express News on 3/01/2019 03:54:00 PM Rating: 5