கென்ய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு

கென்யா – இலங்கை உறவுகளை புதிய துறைகளின் ஊடாக பலப்படுத்துவதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (15) இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இரு தலைவர்களும் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர். 

கென்யா நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சுமூகமான உரையாடலை தொடர்ந்து அரச தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. 

ஒரே வகையான சுற்றாடல் மற்றும் அனுபவங்களைக்கொண்ட, அதேபோன்று ஒரே வகையான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நாடுகளான கென்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதுடன், இரு நாடுகளினதும் மக்களுக்கு விரிவான நன்மைகள் கிடைக்கும் வகையில் அந்த உறவுகளை பலப்படுத்துவதிலும் தலைவர்கள் கவனம் செலுத்தினர். 

குறிப்பாக விவசாயத்துறை நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததுடன், கென்யாவில் தெங்கு பயிர்ச் செய்கையை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவியையும் தொழிநுட்ப அறிவையும் வழங்குமாறு கென்ய ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். 

1970ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் கென்யாவிற்குமிடையில் நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை காணப்படுகின்றன. பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA) ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். கென்யா இலங்கையுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக உதவியாளராக இல்லாதபோதும் பரஸ்பர நன்மைகளைக் கருத்திற்கொண்டு பயன்படுத்தப்படாத பொருளாதார ஆற்றல் வளங்கள் தொடர்பாகவும் இரு நாடுகளும் கவனம் செலுத்தின. 

தற்போது இலங்கையர்கள் கென்யாவில் முக்கியமாக ஆடை உற்பத்தி, நீர் மின் உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மோட்டார் வாகன பயிற்சி துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களது வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதி கென்ய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கென்ய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கென்ய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன Reviewed by Vanni Express News on 3/16/2019 12:23:00 PM Rating: 5