திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவி - பெற்றோர்களே உணவில் விஷம் வைத்த கொடூரம்

தருமபுரி அருகே திருமணத்திற்கு உடன்படாத பள்ளி மாணவிக்கு விஷம் கலந்த உணவு கொடுத்ததாக பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளன‌ர்.

தருமபுரி அருகே அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் 16 வயது மாணவிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மாணவி படிக்க விரும்புவதாகக் கூறி, திருமணத்துக்கு மறுத்ததாக கூறப்படுகிறது. 

மாணவியின் பெற்றோர்கள் வயதானவர்கள் என்பதாலும், மாணவிக்கு மேலும் 3 சகோதரிகள் இருப்பதாலும் திருமண ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாணவியை தொடர்ச்சியாக மிரட்டியும், தாக்கியும் பெற்றோர்கள் வற்புறுத்தி உள்ளனர். 

இதற்கு மாணவி உடன்படாத நிலையில், நேற்று காலை மாணவிக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பிய மதிய உணவில் மர்மப் பொருள் எதையோ கலந்து கொடுத்துள்ளனர். 

இதைக் கண்ட, மாணவியின் தங்கை, ‘பெற்றோர் உணவில் விஷத்தை கலந்துள்ளனர். அதை சாப்பிட வேண்டாம்’ என பள்ளி செல்லும் வழியில் மாணவியை எச்சரித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அந்த உணவை எடுத்துக் கொண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்தில் தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து வாய்வழிப் புகாராகக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோரிடம், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உணவில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது. 

எனவே, மாணவியின் தாய், தந்தை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும், மாணவியை குழந்தைகள் நலக் குழு பாதுகாப்பில் ஒப்படைக்கவும், மாணவியின் 3 தங்கைகள் பாதுகாப்பு தொடர்பாகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தருமபுரி அருகே பெற்ற மகளுக்கு, பெற்றோர்களே உணவில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவி - பெற்றோர்களே உணவில் விஷம் வைத்த கொடூரம் திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவி - பெற்றோர்களே உணவில் விஷம் வைத்த கொடூரம் Reviewed by Vanni Express News on 3/06/2019 02:43:00 PM Rating: 5