எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவோம்

-ஐ. ஏ. காதிர் கான் 

எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவோம் - கெரவலப்பிட்டியவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க

எங்களால் நிறைவேற்ற முடியுமான விடயங்களை மாத்திரமே நாம் வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றோம். அந்தவகையில், எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று, மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வத்தளை - கெரவலப்பிட்டிய இரட்டை சுழற்சி அனல் மின் நிலைய சுற்றாடலில் நடைபெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போது ஊடகங்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு நேற்று முன் தினம் கூறினார்.

அமைச்சர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,

எம்மால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி, மக்களை ஏமாற்றும் எண்ணம் எமக்கில்லை. குறைகள் இருந்தால் அதுபற்றி கட்சிக்குள்ளேயே பேசித் தீர்வு காண்போம்.

இது, தேர்தல் வரவு செலவுத் திட்டமென எதிர்க் கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால், இது எதிர்க் கட்சியை இல்லாமலாக்கும் வரவு செலவுத் திட்டமாகும். மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து, பாவனையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கே நாம் எமது கவனத்தைச் செலுத்தி வருகின்றோம்.

குறைந்த வளத்தை அதிகளவு தேவைகளுக்குப் பயன்படுத்தியே, இம்முறை வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற வகையில், மக்களுக்கு முடிந்தளவு சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவே எதிர்பார்க்கின்றோம். இதைவிட மக்களுக்கு வழங்க முடிந்தால் அதுவும் நல்லதெனக் கருதுகின்றேன். எம்மில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். நாம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமென்றால், புரிந்துணர்வுக்கு வர வேண்டும்.

ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது இணைந்து வேலை செய்கின்றனர். எங்கோ ஒரு இடத்தில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்துகொண்டு ஒன்றாகப் பயணிக்க நாம் முயற்சி செய்வோம் என்றார்.
எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவோம் எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவோம் Reviewed by Vanni Express News on 3/07/2019 02:39:00 PM Rating: 5