- எம்.மனோசித்ரா
கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் அவை அடக்கம் செய்யப்படுகின்றன.
எனவே. இந்த தருணத்தில் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நியாயமான முடிவை எட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (19) சனிக்கிழமை கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொவிட் 19 தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கம் தொடர்பில் கால தாமதமின்றி ஒரு இறுதி தீர்மானத்துக்கு வருவது மிக முக்கியமாகும்.
இறந்த உடலங்களை புதைப்பதனால் வேறு எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது வைத்திய நிபுணர்களின் நிலைப்பாட்டிலிருந்து புலப்படுகிறது. மேலும் எவருக்கும் வேறு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்கின்ற அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
முஸ்லி ம் சமூகத்தின் மத கோட்பாடுகளுக்கமைய இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மறுப்பதானது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அச்செயல் தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS