ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ள மோதல் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, அந்தப் பிரச்சினைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்படும் என்பதால், அக்கட்சியின் உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவுக்கு, முழுப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புத்துறை அமைச்சில், இன்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அக்கட்சிக்குள் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம் என்றும் எனவே, ஹரீன் பெர்ணான்டோவின் பாதுகாப்பு கடுமையாக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஹரீன் பெர்ணான்டோவுக்கு கடுமையான பாதுகாப்பு வழங்குமாறே நாமும் கோரி வருகின்றோம். உள்ள மோதல் காரணமாக அவருக்கு இந்தப் பாதுகாப்பு தேவைப்படும் என்று நாம் கருதுகிறோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த எனினும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கும் ஒரு சிரேஷ்ட அமைச்சர் கோரியுள்ளார்.
வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். எனவே, அக்கட்சிக்குள் பல குழறுபடிகள் இருப்பதால், ஹரீனின் பாதுகாப்பை அதிகரிப்பது நல்லதே” என்று அவர் கூறினார்.
COMMENTS