- ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி 9 மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள், அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்த போது, உயிர்த்த ஞாயிறு தினத் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றத்திலேயே ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல ‘சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஒன்பது மாதங்களாக குற்றச்சாட்டுகள் இல்லாது தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் மிகச் சிறந்த சட்டத்தரணி என்பது எம் அனைவருக்கும் தெரியும், எனவே அவருக்கு பிணை வழங்க வேண்டும்’ என சபையில் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் மூன்று தடவைகள் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபர் உரையாடியுள்ளார்.
அவர் ஒரு எகிப்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புபட்டவர். அவர் “பேல் ஒப் யுநிட்டி” என்ற அமைப்பின் பெயரில் பாடசாலை ஒன்றை நடத்தியுள்ளார். அதில் ஸஹ்ரானும் போதனைகளை நடத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
COMMENTS