-ரஸீன் ரஸ்மின்
ஊடகவியலாளர் கேள்வி - இன்றைய தினம் பிரதமரை ஆனமடுவில் சந்தித்த நீங்கள், நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் பேசிய ஜனாஸா நல்லக்க விவகாரம் தொடர்பில் ஏதாச்சும் கதைத்தீர்களா?
அலி சப்ரி ரஹீம் MP பதில் - இந்த விடயம் தொடர்பில் சில நிமிடங்கள் பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்க சொன்ன விடயத்தை அவசரமாக கெசட் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.
அதுவரை கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை குளிர்பெட்டியில் வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டேன்.
ஜனாஸா நல்லடக்கம் விவகாரத்தில் நீங்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து எமது மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமன்றி, சர்வதேச மட்டத்திலும் பாராட்டையும் பெற்றிருக்கிறது என்றேன்.
ஊடகவியலாளர் கேள்வி - அதற்கு பிரதமர் என்ன சொன்னார் ?
அலி சப்ரி ரஹீம் MP பதில் - கடிதமொன்றை பார்த்துக்கொண்டிருந்தவாறு நான் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர், நிபுணர்கள் குழு உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளோடு அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தி அவர்களின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமரின் கருத்தில் எமக்கு நம்பிக்கையிருக்கிறது. கொரோனாவால் மரணிக்கும் எமது ஜனாஸாக்களை உரிய முறையில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அவருடைய பேச்சு எமக்கு உணர்த்தியது.
எனவே வீணான விமர்சனங்களை தவிரத்து ஆரோக்கியமாக சிந்திப்போம், உள்ளங்களை அறிந்தவன் இறைவன் மட்டுமே. இதற்காக நாம் அனைவரும் ஐவேளைத் தொழுகையிலும் நல்லது நடக்க துஆ செய்வோம் என்றார்.
மிகவிரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
COMMENTS