மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கு இன்று வியாழக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
54 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட மியன்மாரில் சுமார் 50 சதவீதமானோருக்கு இணையத்துக்கான நுழைவாயிலாக பேஸ்புக் விளங்கியது.
மியன்மாரில், டேட்டா கட்டணமின்றி பேஸ்புக்கை பார்வையிடுவதற்கு மக்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அனுமதியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவப் புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிவில் ஒத்துழையாமைக்கான திட்டங்கள் குறித்து பலர் தகவல்களை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை பேஸ்புக்கை முடக்குவதாக மியன்மார் தொடர்பாடல் மற்றும் தகவல்துறை அமைச்சு தெரித்துள்ளது.
மியன்மாரின் பாதுகாப்புப் படைகளின் தளபதியான சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் லேய்ங் தலைமையிலான இராணுவத்தினர் கடந்த திங்கட்கிழமை புரட்சி நடத்தி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர்.
மியன்மாரின் ஜனாதிபதி வின் மியின்ட், அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS