கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்க அனுமதியளிப்பதாகக் கூறி அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரச தலைவர்களையும் ஏமாற்றியுள்ளதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வியெழுப்பினார்.
சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும் உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுவதன் மூலம் இவ்விரு தரப்பினரையுமே ஏமாற்ற முடியும் என்று எண்ணுகின்றனர்.
அவ்வாறு யாரும் ஏமாற மாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கே பாதகமானதாக அமையும் என்றும் ஹர்ஷண ராஜகருணா சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை.
இது தொடர்பில் நாம் சபாநாயகரிடமும் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களைப் போலவே , இதன் பின்னணியில் உள்ளவர்களும் திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
COMMENTS