- ஊடகப்பிரிவு
இலங்கை அரசியலில் இடதுசாரி கட்சிகள் நெருக்கடிக்குள்ளான இக்கட்டான கால கட்டத்தில் குறிப்பாக, பழைமையான கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியை தக்க வைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.சில்வாவின் பங்களிப்பு மகத்தானது. அவ்வாறே இரத்தனபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மறைந்த சுரங்கனி எல்லாவல மற்றும் மறைந்த கபில அபேரத்தின ஆகியோரும் அளப்பரிய சேவையாற்றியுள்ளனர்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் காலஞ்சென்ற பிரஸ்தாப உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அவர்கள் மூவர் மீதும் அனுதாபம் தெரிவித்து உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
மறைந்த கே.பி.சில்வாவை பொறுத்தவரை அவரின் ஆளுமை கம்யூனிஸ்ட் கட்சியின் இதர தலைமைகளான மறைந்த கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹ, பீட்டர் கெனமன், சரத் முத்தெட்டுவேகம ஆகியோருக்கு நிகராக இல்லாதிருந்த போதிலும் கூட, காரியங்களைச் சாதிப்பதில் அவர் சற்றும் தளராதவராகத் திகழ்ந்தார்.
1946 - 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய காலனித்துவ ஆட்சியின் போது ,கொலன்னாவ அரசாங்க தொழிற்சாலை வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக முன்னின்று நடாத்திய பெருமை அவரைச் சாரும்.
அத்துடன் அந்நியர் ஆட்சியின் போது இடதுசாரி தலைமைகளான கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா ,கலாநிதி என்.எம்.பெரேரரா ஆகியோர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அஞ்ஞாதவாசமிருந்த சந்தர்ப்பத்தில், இலங்கையிலிருந்துக்கொண்டு இடதுசாரி இயக்கம் ஆட்டம் கண்டுவிடாது பலப்படுத்தியவராகவும் கே.பி.சில்வா விளங்குகின்றார். முன்னர் அவர் சமசமாஜக் கட்சியிலும் இருந்திருக்கின்றார்.
முதலாவது மாகாண சபைத் தேர்தலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்த போது ஐக்கிய சோஷலிஸக் கூட்டமைப்பின் ஊடாக அத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இருந்து, அபரிமிதமான வெற்றி அக்கட்சிக்கு கிடைத்துவிடாது செய்யவும் மறைந்த கே.பி.சில்வா போன்றவர்கள் பாடுபட்டனர்.
மறைந்த சுரங்கனி எல்லாவல தற்செயலாக அரசியலில் பிரவேசித்தவர். அவரது மகன் நாலந்த எல்லாவலவின் மறைவுக்குப் பின்னர் அவர் இரத்தினபுரியிலிருந்து மாகாண சபை தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை தமது குடும்ப உறுப்பினர்களின் மறைவையடுத்தே அரசியலை அலங்கரிக்கின்றனர்.
தென்கிழக்காசியாவிலேயே தலை சிறந்த அரசியல் பெண்மணியாக மதிக்கப்பட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் கூட, அவரது கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மறைவிற்கு பின்னர் தற்செயலாக அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுரங்கனி எல்லாவல 2001 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் இருந்திருக்கின்றார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரை உரிய முறையில் கவனிக்காது விட்டாலும் கூட, மைத்திரிபால சிறிசேன அவரை மத்திய மாகாண ஆளுநராக நியமித்து கௌரவித்தார்.
அவரது புதல்வர் நாலந்த எல்லாவல நான் வெளிநாடுகளுக்கு பாராளுமன்ற தூதுக் குழுக்கள் சிலவற்றில் தலைமை தாங்கிச் சென்றபோது எமது குழுக்களில் இடம் பெற்றிருந்தார். நாலந்த எல்லாவல பழகுவதற்கு இனிமையானவராக இருந்தார்.
மறைந்த சுரங்கனி எல்லாவல மத்திய மாகாண ஆளுநராக பதவி வகித்த போது, அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக நான் அவரைச் சந்திக்கச் சென்ற போதெல்லாம் தனது மறைந்த மகனின் நண்பர் என்றபடியால் எனது வேண்டுகோள்களை நிறைவேற்றித் தந்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கபில அபேரத்தின ஒரு சட்டத்தரணி.முன்னர் இரத்தினபுரி நகர பிதாவாக இருந்திருக்கின்றார். அவர் கூட நந்தா எல்லாவலயின் மறைவைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வந்தவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கு ஒரு நெருக்கடியான காலத்தில் தான் அவர் பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். குறுகிய காலமே அவர் பாராளுமன்றத்தில் இருந்திருக்கின்றார். அவரது தந்தையும், சகோதரரும் கூட இரத்தினபுரி நகர பிதாக்களாக இருந்துள்ளனர்.
இந்த மூன்று மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது கட்சியின் சார்பில் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
COMMENTS