கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த உடல்களை அடக்கம் செய்யும் நடைமுறைகள் இதுவரை தயாரிக்கப்படாமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர், இறக்குவானை பகுதியில் கொவிட் தொற்றினால் முதலாவது முஸ்லிம் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த முஸ்லிம் பிரஜையின் ஜனாஸா தற்போது இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடலை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற தீர்மானத்தை எட்ட முடியாத நிலையில், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பாரிய சிக்கல் நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுகாதார அமைச்சினால் கொவிட் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பிலான நடைமுறைகள் அறிவிக்கப்படும் வரை, குறித்த முஸ்லிம் நபரின் ஜனாஸாவை மிகவும் பாதுகாப்பாக பொதியிட்டு, அதி குளிரூட்டப்பட்ட இடத்தில் வைப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறக்குவானை நகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக இறக்குவானையில் பதிவான முதலாவது உயிரிழப்பாக இந்த மரணம் பதிவாகியுள்ளதென சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவரது மரணத்தை அடுத்து, குறித்த நபருடன் நெருங்கி பழகிய 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
COMMENTS